கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா!
ADDED :4158 days ago
திருத்தணி : நகராட்சி பகுதிகளில், நேற்று நடந்த ஜாத்திரை திருவிழாவில், கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி நகராட்சிக்குட்பட்ட, 21வது வார்டில் அமைந்துள்ள முருகூர் மற்றும் பாபிரெட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி காலை 9:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பூ கரகம் ஊர்வலம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு திரளான பெண்கள் அம்மன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படைத்து வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கங்கையம்மன் பூ கரகத்துடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு, கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது.