உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்

பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்

நாமக்கல்: கூனவேலம்பட்டிபுதூர் பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், செப்டம்பர், 12ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. நாமக்கல் அடுத்த, கூனவேலம்பட்டிபுதூரில், செங்குந்த முதலியார் சமூகத்துக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய கோவில் உள்ளது. அலவாய் மலையில் வாழ்ந்த சித்தர்கள், இக்கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டு பூஜித்து, இப்பகுதி மக்களுக்கு தீர்த்தத்தை தெளித்து, பக்தர்களின் நோயை நீக்கி அருள் பாலித்து மறைந்தனர் என, கூறப்படுகிறது. அதை தொடர்ந்து, இக்கோவிலில், ஸ்வாமிக்கு பூஜை செய்தபின், முதலில், பக்தர்களுக்கு தீர்த்தம் தெளித்த பின்பே, விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன், காஞ்சி காமகோடி பீடம் மகா காஞ்சி ஸ்வாமி ஜெயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள், ஒரு வாரம் இவ்வூரில் தங்கி இருந்து பூஜைகள் செய்து சிறப்பு பெற்ற இடமாகவும் விளங்குகிறது.

நேற்று காலை, 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, மகா கணபதி, நவக்கிரக ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை, 9 மணிக்கு, மகாலட்சுமி ஹோமம், தன, கஜ, கோ மற்றும் அஸ்வ பூஜையும், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரமும் நடக்கிறது. செப்டம்பர், 11ம் தேதி, காலை, 9 மணிக்கு, இரண்டாம்கால யாகபூஜை, விசேஷ சாந்தி, மாலை, 5 மணிக்கு யாகசாலை பூஜை, வேதபாராயணம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. செப்டம்பர், 12ம் தேதி, அதிகாலை, 4.30 மணிக்கு, ரஷபந்தனம், நாடி சந்தானம், 6.15 மணிக்கு, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 7 மணிக்கு, யாத்ரா தானம், யாக சாலையில் இருந்து கடம் புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 7.30 மணிக்கு, மூலவர் விமான ராஜ கோபுரங்களுக்கு கும்பாபிஷேகமும், 8.15 மணிக்கு, விநாயகர், பாலசுப்ரமணிய ஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !