உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விசிலடித்து இறைவனை பாடும் இசக்கிராஜா!

விசிலடித்து இறைவனை பாடும் இசக்கிராஜா!

திருநெல்வேலியை சேர்ந்த ஈஸ்வர முத்துவின் மகன் இசக்கிராஜா, 51. தந்தை மறைவுக்கு பின், 35 ஆண்டுகளுக்கு முன், சென்னை வந்த இசக்கிராஜா, மாதவரம் அலெக்ஸ் நகரில் தனியே வாடகை வீட்டில் வசிக்கிறார். இறை தொண்டில் அலாதிபிரியம் கொண்டுள்ள இசக்கிராஜா, பூ மாலை தொடுத்து கோவில்களுக்கும், நாகலிங்கப்பூக்களை வேண்டுவோரது வீடுகளுக்கும் விற்று, பிழைப்பு நடத்தி வருகிறார். ஆறாவது மட்டுமே படித்துள்ள இசக்கிராஜாவுக்கு, இறைவனை போற்றி பாடுவது பிரியமான விஷயம். ஓரளவு எழுத படிக்கத் தெரிந்த அவர், காதில் கேட்கும் பக்தி பாடல்களை, அப்படியே மனப்பாடமாக நினைவில் வைத்து பாடி வருகிறார்.மனைவியை பிரிந்து வாழும் இசக்கிராஜாவுக்கு, சொந்தமாக இருப்பது கடவுள்கள் தான் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.பெரம்பூர், கொடுங்கையூர் மற்றும் மாதவரம் சுற்றுவட்டார பகுதியில் இசக்கிராஜாவை அறிந்தவர்கள் பலர். அதிலும் ’விசில் பாடகர்’ என்றால் சட்டென்று இசக்கிராஜாவை சுட்டிக்காட்டி விடுவர். கோவில்களிலும், சாலையில் செல்லும் போதும், விசிலடித்தபடியே பக்தி பாடல்களை பாடிச்செல்வது இவரது வழக்கம்.

இதுகுறித்து இசக்கிராஜா கூறியதாவது: தந்தை ஈஸ்வர முத்து பக்தி பாடல்களை பாடுவதோடு, நாதஸ்வரமும் வாசிப்பார். நான் விசிலடித்து பாடுவதை பாடுவதை கேட்ட பலர், என்னை, விநாயகர் சதுர்த்தி மற்றும் அய்யப்ப பஜனைகளில் பாட வைத்துள்ளனர்.ஒருமுறை ஏசுவை பற்றி ஆங்கிலத்தில் பாடியதை கேட்ட நான், அய்யப்பனையும் ஆங்கிலத்தில் பாட வேண்டும் என, ஆசை கொண்டேன்.அய்யப்ப பாடல் ஒன்றை தெரிந்தவர்கள் மூலமாக, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதை அப்படியே தமிழில் எழுதி பாடியுள்ளேன். எனது ஆசை, சொந்தமாக ஒரு கோவில் கட்டி அதில் எனக்கு பிடித்த தெய்வத்தை வைத்து, பாட வேண்டும் என்பதே.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !