கணபதி ஹோமத்துடன் நவராத்திரி விழா துவக்கம்
திருத்தணி : அம்மன் கோவில்களில் நேற்று நவராத்திரி விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று நவராத்திரி விழா துவங்கியது. விழாவை ஒட்டி, காலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதே போல், திருத்தணி, மடம் கிராமத்தில் உள்ள, படவேட்டம்மன் கோவிலில், நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் நவராத்திரி விழா துவங்கியது, இரவு 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல், திருத்தணி பகுதியில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில், நேற்று நவராத்திரி விழா துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.