சாமுண்டீஸ்வரி பூஜையுடன் தசரா துவங்கியது!
பெங்களூரு: மைசூரு, சாமுண்டீஸ்வரி தேவிக்கு, வேத கோஷங்களுக்கிடையே, பூஜை செய்யப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற, மைசூரு தசரா உற்சவம் துவங்கியது.மைசூரு, சாமுண்டீஸ்வரி தேவிக்கு, பக்தர்களின் கோஷங்கள், மங்கள வாத்தியங்களுக்கு இடையில், துலா லக்னத்தில், ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், சாமுண்டீஸ்வரி தேவிக்கு புஷ்பார்ச்சனை செய்து, தசராவை துவக்கி வைத்தார்.மைசூரு மன்னரின் வாரிசு, கண்டதத்த நரசிம்மராஜ உடையார் மறைந்த பின்னர் நடக்கும், முதல் மைசூரு தசரா உற்சவம் இதுவாகும்.
விழாவில், கிரிஷ் கர்னாட் பேசியதாவது:தசரா உற்சவத்தை துவக்கி வைக்க வாய்ப்பு கிடைத்திருப்பது, பெரும்பாக்கியம். நான், நாத்திகன் என்று, சிலர் குற்றம் சாட்டுகின்றனர்; எனக்கு எதிராக, இன்று (நேற்று) போராட்டமும் நடத்தியுள்ளனர். இதற்கு முன்பும் கூட, பெரும்பாலான நாத்திகர்கள், தசரா உற்சவத்தை துவக்கி வைத்தனர் என்பதை, போராட்டக்காரர்கள் மறந்துவிடக் கூடாது. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, தயாராக உள்ளேன். நானும் கூட, சிர்சியின் தேவிமாரிகாம்பா புண்ணியதலத்தில் பிறந்து வளர்ந்தவன் தான். கடவுளின் பூஜை, ஆன்மிக கொண்டாட்டங்கள் தொடர்பாக, அவரவர் உணர்வுகள் தொடர்புடைய விஷயங்களாகும். எனக்கு, தசரா துவக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தபோது, பெங்களூருவில் இருந்த ராணி பிரமோதா தேவியை சந்தித்து பேசினேன். அவரிடமிருந்து, நல்ல பதில் கிடைத்தது.இவ்வாறு, அவர் பேசினார்.முதல்வர் சித்தராமையா பேசியதாவது: தசரா சந்தர்ப்பத்தில் மழை, விளைச்சல் அதிகரிக்கும்படி, கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளேன். மாநிலத்தில், எட்டு மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; ஏழு மாவட்டங்களில், வறட்சி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம், வறட்சி பாதிப்புக்கிடையில், மாநிலம் வளர்ச்சியடைய செய்யும்படி, பிரார்த்தனை செய்துள்ளேன். மைசூரு தசராவுக்கென, தனிப்பட்ட வரலாறு உள்ளது. மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மக்கள், இதில் பங்கேற்க வேண்டும். விஜயநகர் சமஸ்தானத்தில், அரசர்கள் காலத்தில் துவங்கிய தசரா, தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.