தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி விழா!
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழாவை முன்னிட்டு நடந்த, பெங்களூர் சுவேதா லெஷ்மன் குழுவினரின் பரதநாட்டியம், பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அக்டோபர் 3ம் தேதி முடிய விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தசாவதார அலங்கார நிகழ்ச்சிகள் நடக்கிறது. துவக்க விழாவில் மனோன்மணி அம்மன் அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு பெங்களூர் சுவேதா லெஷ்மன் குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது. இவை பக்தர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. இரண்டாவது நாளான நேற்று அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (27ம் தேதி) அம்மன் காயத்ரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு கோயம்புத்தூர் சஜினிஹரி குழுவினரின் வாய்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அரண்மனை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் தென்னக பண்பாட்டு மைய நிர்வாகிகள் இணைந்து செய்துள்ளனர்.