நம்பெருமாளுக்கு தங்க குடை வழங்கியது யார்?
திருமலை திருப்பதி திருக்கோவிலுக்கு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஆண்டு தோறும் சென்னையில் இருந்து, திருக்குடை அன்புடனும், மரிய õதையுடனும் அளிக்கப்படும் வைபவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று சான்றுகளில், குடை முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. பண்டைய நாளில், அரச சின்னமாக விளங்கியிருக்கிறது. சேரன், செங்குட்டுவன், மாலை வெண்குடை மன்னன்... என, சிலப்பதிகாரத்தில் போற்றப் படுகின்றான். குடிமக்களுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து, அவர்களை காப்பாற்றி, தன் அருட்குடையின் கீழ், அரசர்கள் கொண்டு வரவேண்டும் என, வெள்ளைக்குடி நாகனார் என்னும் சங்கப்புலவர் கூறுகின்றார். சோழ மன்னர்களின், மெய்க்கீர்த்தியில் குடையின் சிறப்பு கூறப்படுகிறது. பன்மணிக்கொற்ற வெண்குடை நிழற் குவலயத்து உயிர்களைப் பெற்ற தாயினும் பேணி... என்று, வீர ராஜேந்திர சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
வெண்குடை நிழற்கீழ் செங்கோலோச்சி... என்று, குலோத்துங்க சோழனின் கல்வெட்டு எடுத்து கூறுகிறது. வேள்விக்குடி செப்பேடு, கூரம் செப்பேடு போன்றவைகளிலும், குடையின் பெருமை பேசப்படுகிறது. பண்டைய மன்னர்கள், வெளியிட்ட காசுகளிலும், குடை இடம் பெற்றுள்ளது. தெய்வ வழிபாடு நடக்கும் இடங்களில், அரசனது குடை தாழ்த்தி பிடிக்கப் பெறும். பிற இடங்களில் உயர்த்தி பிடிக்கப்படும் என, புறநானுாற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. போரில் வெற்றி கண்ட அரசர்கள், தோல்வி அடைந்த அரசனின், கொற்றக்குடையின் மரக்கம்பை முறித்து, அதில் விலை உய ர்ந்த கற்கள் பதித்து, தலைக்கோலி என்று பெயர் சூட்டி, அதை சிறந்த ஆடல் மகளிருக்கு, பட்டமாக வழங்குவர் என, சிலப்பதிகாரம் கூறுகிறது. திருக் கோவில்களில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் தெய்வ உருவங்களுக்கு மேலே, குடை காண்பிக்கப் படுவது வழக்கம். அத்தகைய பல்லவர் கால சி ற்பங்களை, காஞ்சி கைலாசநாதர் கோவில்களில் காணலாம்.
பன்னமலை கோவிலில் காணப்படும், பல்லவர் கால ஓவியத்தில், இறைவனது நடனத்தை கண்டு வியக்கும் உமாதேவியின் தலைக்கு மேலே, அழகிய வண்ணக்குடை பள்ளித் தொங்கல்களுடன் அலங்கரிப்பதைக் கண்டு மகிழலாம். சோழர் கால சிற்பங்களிலும், அழகிய குடைகளை காணலாம். மராட்டியர் கால ஓவியங்கள் வரை, பலவித அமைப்புடன் குடைகளைக் காணமுடிகிறது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கு, ராஜராஜ சோழன் காலத்தில் திருக்கொற்றக்குடை அளிக்கப்பட்டது. அரியலுார் அருகே உள்ள திருமழபாடி கோவிலுக்கு, முத்துக்களால் ஆன குடை தானமாக அளிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு, வண்ணக்கற்கள் பதித்த, பொன்னால் ஆன குடை, விஜய ரெங்க சொக்கநாத நாயக்கரால் அளிக்கப்பட்டது. அக்குடையில் தெலுங்கு எழுத்துப் பொறிப்பும் காணப்படுகிறது. இன்றும், அக்குடை நம்பெருமாளுக்கு சேவை செய்து வருகிறது. திருக்கோவில் வழிபாட்டு முறையிலும், சோடச உபசாரம் என்ற வழிபாட்டில், குடை முதல் இடம் பெற்று விளங்குகிறது. சமண சமயத்திலும், தீர்த்தங்கரரின் தலைக்கு மேலே மூன்று குடைகள் காண்பிக்கப்பட்டிருக்கும். அவரை, முக்குடை பகவன் என்றே அழைப்பர். திருக்கோவில்களில், இறைவன் வீதியுலா வரும் போது, குடைகள் முக்கிய அலங்காரப் பொருளாக இடம் பெற்று விளங்குகின்றன. திருமலை வேங்கடவனுக்கு சமர்ப்பிக்க இருக்கும் திருக்குடைகளைக் கண்டு வணங்கி மகிழ்ச்சி அடைவோம். (கட்டுரையாளர், தொல்லியல் அறிஞர்)