உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி கோவிலில் திருடப்பட்ட சிலைகள் மீட்பு!

பரமக்குடி கோவிலில் திருடப்பட்ட சிலைகள் மீட்பு!

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திருடப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளை போலீசார் மீட்டனர். அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமம் மற்றும் விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களை சேர்ந்த, சுவாமி சிலைகளை கடத்தி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்று, கோடிகளை குவித்து வந்த, சுபாஷ் கபூர் கைதுக்கு பின், தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பவங்கள் குறையத் துவங்கின. ஆனால், சில தினங்களுக்கு முன், கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தலை தூக்கியதால், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஒரு கோவிலை சேர்ந்த, முருகன், வள்ளி, தெய்வானை, மயில், திருவாச்சி, பீடம் ஆகியவற்றை திருடிக் கொண்டு, ஒரு கும்பல், மதுரை அழகர் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக, தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., சுந்தரம் தலைமையில், அங்கு விரைந்து சென்ற போலீசார், திருநெல்வேலியை சேர்ந்த சிவா, மதுரையை சேர்ந்த தினேஷ், அப்துல் அஜீஸ் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, மூன்று சிலைகள், திருவாச்சி மற்றும் பீடத்தை பறிமுதல் செய்தனர். இந்த சிலை கடத்தல் சம்பவத்திற்கு, மூளையாக இருந்து செயல்பட்ட, திருநெல்வேலியை சேர்ந்த குட்டி என்பவன் தலைமறைவாகி விட்டான். அவனை கைது செய்தால் தான், இன்னும் எத்தனை சிலைகள் திருடப்பட்டுள்ளன, யார், யாரிடம் விற்பனை செய்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும் என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !