சந்திர கிரகணம் கோவில் மூடல்: சிறப்பு பூஜைக்கு பின் திறப்பு!
சேலம்: சந்திர கிரகணத்தை ஒட்டி நேற்று மதியம் சேலம் கோவில்கள், அனைத்து மூடப்பட்டது. அதன் பின்னர் நடந்த சிறப்பு பூஜையில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். சந்திரகிரகணத்தை முன்னிட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில், கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களும், கந்தாஸ்ரமம், ஊத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட தனியார் கோவில்களும், நேற்று மதியம், 2 மணி முதல் மாலை, 6.30 மணி வரையில் நடை சாத்தப்பட்டது. பின்னர் இரவு, 7 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டு, கோவில் முழுவதும், தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சந்திர கிரகண பரிகார பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.