துறையூர் ஓங்கார குடிலில் பவுர்ணமி பூஜை சொற்பொழிவு
துறையூர்: துறையூர் ஓங்கார குடிலில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில் நடந்த பவுர்ணமி பூஜையில், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. துறையூர் ஓங்காரகுடிலில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில், மாதந்தோறும் பவுர்ணமி பூஜை நடக்கிறது. சங்க நிறுவனர் ஆறுமுக அரங்கமகா தேசிக ஸ்வாமிகள் தலைமை வகித்து, அன்பர்களுக்கு தீட்சை வழங்கி பேசியதாவது: ஞானிகள், சித்தர்கள் ஆசி பெற்றதால், ஞான நூல்களில் உள்ள கருத்து மூலம், ஞான தலைவன் முருகபெருமானின் புகழை சன்மார்க்க சங்கத்தின் மூலம் பரப்பி வருகிறேன். இந்த சேவையில் இணைந்துள்ள அனைவருக்கும் தலை வணங்குகிறேன். ஞான தலைவனின் ஆசி கிடைத்தால், முதுமையை வென்று இளமையை திரும்ப பெறலாம். முருகனின் புகழை பற்றி பேச, இந்த ஜென்மம் போதாது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி கோபம், அறியாமை, காமம், வன்சொல் தவிர்த்து வாழவேண்டும், என அருளுரை வழங்கினார்.
விழாவில், கிருபானந்த வாரியாரின் மாணவி தேசமங்கையற்கரசி பேசியதாவது: ஞானிகளும், மகான்களும் நூறு ஆண்டுக்கு ஒருமுறை, கடவுளால் நமக்கு வழிகாட்ட அனுப்பப்படுகின்றனர். வள்ளலார் வாழ்ந்த காலத்தில், அவரை மகான் என்று யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஓங்கார குடில் மூலம், முருகனின் புகழ் பரப்பி அன்னதானம் செய்து வரும் ஆறுமுக அரங்க மகா தேசிக ஸ்வாமிகளின் வழிகாட்டுதலின் படி, நடந்து மகான்கள் கூறிய ஜென்மத்தை நாம் அனைவரும் கடைத்தேற்றி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ஜோதி தரிசனம், வழிபாடு, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், தஞ்சை இசைகல்லூரி கலைஞர்களின் கூட்டு வாத்திய நிகழ்ச்சி, சித்தர்கள் ஞான பூஜை, ஸ்வாமியின் அருளுரை நூல், "சிடிவெளியீடு, பரதநாட்டியம், கேரள பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சி நடந்தது. அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.