சூரசம்ஹாரத்திற்காக குன்றத்தில் வேல் பெற்ற முருகன்!
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று(அக்.,29) மாலை 6 முதல் 6.30 மணிக்குள் நடக்கும் சூரசம்ஹாரலீலைக்காக நேற்று கோவர்த்தனாம்பிகையிடம் முருகன் வேல் பெற்றார். கோயிலில் அக்.,24ல் துவங்கிய கந்த சஷ்டி திருவிழாவின் 5ம் நாளான நேற்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு, கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் இருந்த நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.இன்று மாலை 5 மணிக்கு சுவாமி, சம்ஹார அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சூரபத்மனை எட்டு திக்குகளிலும் சுவாமி விரட்டிச் சென்று, சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.