உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்!

சென்னை கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்!

பாரிமுனை: கந்த சஷ்டியை முன்னிட்டு, இன்று கந்தகோட்டம், வடபழனி கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகன் கோவில்களில், கடந்த வாரம் முதல், சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

கந்தகோட்டத்தில்... நேற்று கந்தகோட்டம் என்றழைக்கப்படும், முத்துகுமாரசுவாமி கோவிலில், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடைபெற்றது. மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில், சஷ்டியை முன்னிட்டு, நேற்று லட்சார்ச்சனை நடைபெற்றது. ஆறுமுக சுவாமி அலங்காரத்துடன், உற்சவ முருகன் கம்பீரமாக காட்சியளித்தார். இன்று மாலை 6:00 மணி முதல் கந்தகோட்டம் கோவில் சார்பில், பாரிமுனை மாலை அங்காடி சாலையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில், இன்று மதியம் 12:00 மணிக்கு பால்காவடி ஊர்வலம், பால்குட அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து உற்சவ முருகன் மயில் வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

சிறுவாபுரியில்...: சிறுவாபுரி, முருகன் கோவிலில், கடந்த, 24ம் தேதி, கந்த சஷ்டி விழா துவங்கியது. கந்தசஷ்டி ஐந்தாம் நாள் வேல் வாங்கும் விழாவை முன்னிட்டு, நேற்று, முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெற்றன. மாலையில் நடைபெற்ற வேல் வாங்கும் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, மயில் வாகனத்தில் எம்பெருமான் முருகன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை, சிறுவாபுரி முருகன் கோவிலில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது.

திருவான்மியூரில்...: திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 7:30 முதல் மாலை 5:30 மணிவரை ஏக தின லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. இன்று மாலை 6:30 மணிக்கு சூரசம்ஹார விழாவும், நாளை இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !