கோவில்களில் கும்பாபிேஷக விழா கோலாகலம்!
பொள்ளாச்சி : பொள்ளாச்சி குமரன் நகர் சித்தி விநாயகர், கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. பொள்ளாச்சி குமரன் நகரில் உள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர், கன்னிமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டன. அதன் படி, கருப்பராயன், புனராவர்த்தன காசிவிஸ்வநார் விசாலட்சி அம்மன் சந்நதிகளும் புனரமைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக விநாயகர் பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, மூன்று கால யாக பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 8:00 மணிக்கு சித்தி விநாயகர், கன்னிமுத்து மாரியம்மன், கருப்பராயன், காசிவிஸ்வநாதர் கோபுர கலசங்களுக்கும் மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு தச தரிசனம், தச தானம், மகா அபிேஷகமும், காலை 10:00 மணிக்கு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெறுகிறது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
மொண்டி காளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்:ஆனைமலை அருகே அமைந்துள்ள பெத்தநாயக்கனூர் கிராமத்தில் , 300 ஆண்டுகள் பழமைமிக்க ஸ்ரீ மொண்டி காளியம்மன் கோவிலில் நேற்று நடந்த மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி கடந்த 28ம் தேதி திருவிளக்கு வழிப்பாடு, புனிதநீர் வழிபாடு, மூத்தபிள்ளையார் வழிபாடும், புதன்கிழமை இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நிறையவி அளித்தல், பேரொளி வழிபாடு, என்வகை மருந்து சாற்றுதல் ஆகியன நடந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 6.00 மணிக்கு நாடி சந்தனம், நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, ஞான உலா, புனித தீர்த்த குடம் புறப்பாடு ஆகியவை நடந்தது.காலை 8.30 மணியளவில் புனித நீர் அடங்கிய குடங்கள் கொண்டு செல்லப்பட்டு, கோபுரங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம், தீபாராதனை ஆகியன நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பெத்தநாயக்கனூர். கெங்கம்பாளையம், அண்ணாநகர், தென்சித்தூர், ஆனைமலை உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.