உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னிரு திருமுறை மன்றத்தின் அறுபத்து மூவர் திருவீதி உலா!

பன்னிரு திருமுறை மன்றத்தின் அறுபத்து மூவர் திருவீதி உலா!

சேலம்: சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், பன்னிரு திருமுறை மன்றத்தின் சார்பில் நடந்த, அறுபத்து மூவர் திருவீதி உலாவை, திரளாக பக்தர்கள் தரிசித்தனர்.சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், பன்னிரு திருமுறை மன்றத்தின் சார்பில், அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, ஐங்கரப் பெருமானுக்கு திருமஞ்சனம், சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு திருமஞ்சனம், அனைத்து திருமேனிகளுக்கும் (அபிடேகம்) திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு, புத்தாடை அணிவிக்கப்பட்டது.

திருவையாறு பஞ்சநந்தீஸ்வரர் கோவிலின் தருமை ஆதீனம் குமாரசாமி தம்பிரான், சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரம செயலாளர் யதாத்மானந்தர், ராஜராஜேஸ்வரி மகிளா சமாஜத்தின் தலைவர் சரஸ்வதி அம்மா ஆகியோர் முன்னிலையில், திருமுறை கண்ட விநாயகர், அங்கயற்கண்ணி உடனமர் சொக்கநாதர், சேயிடைச் செல்வர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார்கள், மாணிக்கவாசகர், சேக்கிழார் பெருமாள் திருமேனிகளுக்கு பெரும் திருமஞ்சன வழிபாடு (மகா அபிடேகம்) நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், பூஜைகள் நடந்தது.மதியம், திருமுறை வழிபாடு, விண்ணப்பம் பேரொளி வழிபாடு, மகாதீபாராதனை செய்விக்கப்பட்டது. தொடர்ந்து, அருளாளர்கள் அமுதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், அறுபத்து மூவர் திருவீதி உலாவை, மாணிக்கம் துவக்கி வைத்தார். பன்னிரு திருமுறைகளுடன், இறைவன், இறைவி, ஐங்கரன், முருகப்பெருமான், அறுபத்து மூவர் திருமேனிகளும், சிவகானப் பேரிகை முழங்க சிவனடியார்களும், பக்தர்கள் புடை சூழ திருவீதி உலா நடந்தது.இதில், கரூர், பவானி, திருப்பூர், ராசிபுரம், திருச்செங்கோடு, ஆத்தூர் ஆகிய இடங்களில் இருந்து சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு, அறுபத்து மூவர் உலாவை கண்டு தரிசித்தனர்.அறுபத்து மூவர் திருவீதி உலாவுக்கான ஏற்பாடுகளை, பன்னிருதிருமுறை மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !