உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்மஞ்சேரி செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

செம்மஞ்சேரி செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

சென்னை: பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரி கிராமத்தில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோயில் உள்ளது.  இந்த கோயில் பராமரிக்க பொருளுதவி இல்லாமல் சிதிலிமடைந்து பல ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட முடியாத படி இருந்தது. அர்ச்சகர்கள்  மட்டும் தினசரி பூஜை செய்து வந்தனர்.

இந்நிலையில் அம்மனுக்கு புதிதாக கோயில் கட்டும் பணியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொண்ட  திரு.ஜெயகிருஷ்ணன் அவர்கள்,  பளிங்குகற்கள் மற்றும் பாறைகள் கொண்டு பழங்கால முறையில் சிறப்பான முறையில் செல்லியம்மன் கோயிலை  கட்டிமுடித்துள்ளார். இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த நவ.2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான  பக்தர்கள் அதிகாலை முதலே திரளாக பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர்.

முன்னதாக அக். 31, வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் விக்னேஷ்வர பூஜை, மங்கள வாத்தியத்துடன் புண்ணியா வஜனம், ஸ்ரீ மஹா  கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் சுதர்ஸன ஹோமம், அஸ்த்ர ஹோமங்களோடு ஆரம்பான நிகழ்ச்சி மாலையிலும் தொடர்ந்தது. மாலை ஆறு  மணி அளவில் அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம், புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், அங்குரார்பனம், ம்ருத்ஸ ங்கிரஹனத்தோடு கும்பம் அலங்கரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல் கால பூஜை செய்யப்பட்டு தீபாரதனையும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. முதல் நாள் ஹோமங்களை தொடர்ந்து கும்பாபிஷேகத்தின் இரண்டாம் நாளான நவம்பர் 1ம் தேதி தன பூஜை, கோ பூஜை, தம்பதி  பூஜை, கன்யா பூஜை, வேதிகா பூஜைகளும் இரண்டாம் யாகசால பூஜைகள் தீபாராதனையோடு நிறைவுப் பெற்றது. மாலை 6 மணிக்கு வேத மந்திர  ஜெபங்களும் மூன்றாம் யாகசால பூஜைகள் தீபாரத்தனைகளை பக்தர்கள் தரிசித்தனர். 8 மணிக்கு எந்திர பிரதிஷ்டை மற்றும் தேவதா பிரதிஷ்டையோடு நிறைவு அடைந்தது.

மகா கும்பாபிஷேகமான மூன்றாம் நாள், ஞாயிற்றுகிழமை (நவ.2) அன்று காலை 9.15 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் அன்று காலை 6.45 மணி  அளவில் மங்கள வாத்தியங்கள் இசைக்க விக்னேஷ்வர பூஜை, புண்ணியா வாசனம், வேதிகா பூஜையும் நான்காம் யாக சாலை பூஜைகளும் மூல  மந்திர ஹோமங்கள் நடைபெற அம்மனுக்கு  கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6.00 மணிக்கு மங்கள வாத்தியத்துடன்  விக்னேஷ்வர பூஜையும் அதை தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகளோடு கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. கோயில் திருப்பணி  குறித்து ஜெயகிருஷ்ணனின் அவர்களிடம் கேட்டபோது “ ஒருவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் 10 சதவிகிதத்தை சேவைக்கு ஒதுக்க வேண்டும்  என்ற கொள்கை உடையவன் நான். அதன் காரணமாக தமிழக பள்ளிகள் பலவற்றை தத்து எடுத்து கல்வி சேவை அளித்து வந்தேன். அதன்  தொடர்ச்சியாக தற்பொழுது என் சொந்த ஊரில் இருக்கும் இந்த கோயில் சிதிலமடைந்து பக்தர்கள் வழிபட முடியாமல் இருந்ததை அறிந்து உடனே  புதிய கோயில் கட்டும் பணியை ஆரம்பித்து முடித்தேன். மனதிற்கு அமைதி தரும் அம்மனை வழிபட வரும் தலைமுறைக்கு வழி அமைத்து  கொடுத்தை  நிறைவாக கருதுகிறேன். ஊர் மக்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற வேண்டும்” என்றார்  மகிழ்ச்சியாக. கேட்போர்க்கு கேட்கும் வரமருளும் சக்தி வாய்ந்த தெய்வமான  ஸ்ரீ செல்லியம்மனை வழிபடுவோம். சுமார் 60 லட்சம் ரூபாய்  செலவில் செல்லியம்மன் கோயில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் செம்மஞ்சேரி ஊர் மக்கள் கொட்டும்  மழையையும் பொருட்படுத்தாமல் கும்பாபிஷேக தினத்தன்று திரண்டுவந்து செல்லியம்மனை வழிபட்டனர். கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து  தினமும் இக்கோயிலில் மண்டல அபிஷேகம் மற்றும் ஆறு கால பூஜையும் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !