வியாசேஸ்வரருக்கு அபிஷேகம்!
ஆர்.கே.பேட்டை: ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, வங்கனுார், வியாசேஸ்வரருக்கு, நேற்று, பாலாபிஷேகம், அன்னாபிஷேகம் நடந்தது. வங்கனுார் வியாசேஸ்வரர், நாகபூண்டி நாகேஸ்வரர், பள்ளிப்பட்டு சங்கமேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில், நேற்று, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு, வங்கனுார் செவிண்டியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, 108 பால்குடங்கள், வியாசேஸ்வரர் மலைக்கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலம், பெருமாள் கோவில் தெரு, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, பகல் 12:00 மணிக்கு, மலைக்கோவிலை அடைந்தது. மூலவர் வியாசேஸ்வர பெருமானுக்கு, 108 பால்குடங்கள் அபிஷேகம் செய்யப்பட்டன. மாலை 4:00 மணிக்கு, அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு மகா தீபாராதனையும், அபிஷேக அன்னம் பிரசாத வினியோகமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.