உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்!

ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்!

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று, அன்னாபிஷேகம் நடந்தது.   கும்மிடிப்பூண்டி, எஸ்.பி., முனுசாமி நகரில் உள்ள வில்வநாதீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை  அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.  வில்வநாதீஸ்வரர் மட்டுமின்றி, சித்தி விநாயருக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. கவரைப்பேட்டை அருகே, அரியத்துறை கிராமத்தில் உள்ள  வரமூர்த்தீஸ்வரர் மற்றும் பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவில்களில், நேற்று மாலை, அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர்: திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத  தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர், சிவா – விஷ்ணு கோவில், பெரியகுப்பம் ஆதிசோமேஸ்வரர் ÷ காவில் ஆகிய சிவன் கோவில்களில், நேற்று மாலை, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், சிவபெருமானுக்கு, அன்னத்தால்  அலங்காரம் செய்யப்பட்டு பின், அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவா யநம என்ற மந்திரத்தை கூறி, சிவனை வழிபட்டனர்.

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ள காமாட்சி அம்பாள் உடனுறை சோளீஸ்வரர் கோவிலில், நேற்று அன்னாபிஷேகம்  நடந்தது. இதையடுத்து, இரவு 7:00 மணிக்கு, சோளீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில்,  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் உள்ள தங்காதலி அம்மன்  உடனாய வாசீஸ்வரர் கோவில், வாசீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், தங்காதலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

அதன்பின்,  இரவு 7:30 மணிக்கு, மகா அபிஷேகம் நடந்தது.காஞ்சிபுரம் முக்கிய கோவில்களான வழக்கறுத்தீஸ்வரர், திருக்காலிமேடு சத்திய நாதசுவாமி, மேட்டுத்தெரு நகரீஸ்வரர், காசி விஸ்வநாதர், தீர்த்தேஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடந்தது. அதன் பின்,  மூலவருக்கு சாத்தப்பட்ட அன்னத்தை தயிர் சாதமாகவும், சாம்பார் சாதமாகவும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !