ஐயப்பனுடன் ஓராண்டு: விடைபெறும் மேல்சாந்தி நெகிழ்ச்சி!
சபரிமலை: “சபரிமலையில் ஐயப்பனுடன் வாழ்ந்த ஓராண்டு அனுபவம் வார்த்தையால் விவரிக்க முடியாதது,” என நேற்று பதவி நிறைவு பெற்ற மேல்சாந்தி பி.என். நாராயணன் நம்பூதிரி தெரிவித்தார். சபரிமலையில் ஒவ்வொரு கார்த்திகை 1ம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கு ஒரு மேல்சாந்தி நியமிக்கப்படுகிறார். திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேர்முகத்தேர்வு நடத்தி ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்படும்; அதிலிருந்து ஒருவர், ஐப்பசி ௧ல் சபரிமலை ஸ்ரீகோயில் முன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்.அவர், கார்த்திகை ௧ல் பதவியேற்று ஓராண்டு காலம் எங்கும் செல்லாமல், சபரிமலையில் தங்கி பணிபுரிய வேண்டும். கடந்த கார்த்திகையில் பதவியேற்றவர் பி.என். நாராயணன் நம்பூதிரி. அவரது பதவிக் காலம் நேற்று நிறைவு பெற்று ஊர் திரும்பினார்.
அவர் தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
நீங்கள் பொறுப்பேற்ற நாள், இப்போது விடை பெறும் நாள்- மனநிலை எப்படி உள்ளது?
பொறுப்பேற்ற போது மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த ஓராண்டு ஐயப்பன் வாழும் இந்த சன்னிதானத்தில் வாழ்ந்தது, இரவில் துாங்கியது வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள். தேவசம்போர்டு, தந்திரி போன்றோர் நல்ல ஒத்துழைப்பு தந்தனர். என் சேவையை பூர்த்தி செய்த மனநிறைவோடு விடை பெறுகிறேன். இந்த ஓராண்டு அனுபவத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது.நான் ஐயப்பனுக்கு ஒரு துலாபார தராசு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். பாலக்காட்டை சேர்ந்த விற்பன்னர்கள் 21 நாளில் மிக நேர்த்தியாக இதனை செய்துள்ளனர்.
பக்தர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
சபரிமலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக்,பாலிதீன் பொருட்களை கொண்டு வராதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இனி வரும் ஓராண்டு மண்டல, மகரவிளக்கு பூஜைகள் மிகவும் நன்றாக அமைய வேண்டும்.
ஐயப்பன் சன்னதியில் வாழ்ந்த ஓராண்டு உங்களில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
கோயில் நடை மூடப்பட்டிருந்த போது ’சரண மந்திரம்’ கூறி என் பொழுது கழிந்தது. பூஜைகளும், பிரார்த்தனைகளுமாக என்னை ஐயப்பனில் அர்ப்பித்தேன். யதார்த்தமாக கூறினால், ஐயப்பன் சன்னதியில் இருந்து செல்வது வருத்தமானதே (கண் கலங்கினார்).
ஊருக்கு சென்ற பின்னர் அடுத்த பணி என்ன?
எனக்கு தேவசம்போர்டு ஆறு மாதம் விடுப்பு தந்துள்ளது. அதற்கு பிறகு பெரும்பாவூர் சாஸ்தா கோயிலில் பணிபுரிவேன். தமிழகம், ஆந்திராவில் இருந்து கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. மதுரைக்கும் வர உள்ளேன். இனி ஆண்டுக்கு ஒரு முறை, சபரிமலை தரிசனத்துக்கு வருவேன். ஐயப்பனுடனான என் அனுபவங்களை புத்தகமாக எழுதவும் ஆசை உள்ளது.
நீங்கள் பிற ஊர்களில் பூஜைசெய்ததற்கும், சபரிமலையில் பூஜை செய்ததற்கும் இடையே உணர்ந்த வித்தியாசம் என்ன?
சபரிமலை ஸ்ரீகோயிலுக்குள் செல்லும் போது உடம்பில் ஒருவித அதிர்வு ஏற்படுகிறது. அதுதான் சபரிமலை ஐயப்பனின் மகத்துவம். பக்தர்கள் ஐயப்பனிடம் எதுவும் கேட்க வேண்டாம். மனதில் நினைத்தாலே போதும்; எல்லாம் நடக்கும். குழந்தை இல்லாதவர்கள் கவலையோடு வந்து, மணி பூஜித்து வாங்கி செல்கின்றனர். பின், அவர்கள் வேண்டுதல் நிறைவேறுகிறது.
தமிழக பக்தர்கள் பற்றி தங்கள் கருத்து?
’ ஐயப்பா காப்பாத்து ’ என்று கூறிக்கொண்டே என்னை பார்க்க வருவார்கள். தமிழக பக்தர்களின் அன்பு மனதில் நெகிழ்ச்சி தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.