வீரபாண்டியில் பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்படுமா?
தேனி : சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமராஜ் கலெக்டர் பழனிசாமியிடம் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பன், முருக பக்தர்கள் மாலையணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து வீரபாண்டி வழியாக கோயிலுக்கு செல்வார்கள். இந்த மூன்று மாதங்களில் பல லட்சம் பேர் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு வருவார்கள். இங்கு குளித்து விட்டு உடைமாற்றவும், கழிப்பறை வசதியும் இன்றி தவிக்கின்றனர். இந்த வசதிகள் செய்ய வலியுறுத்தி பல முறை மனு கொடுத்தும் பலன் இல்லை. தேனியில் இருந்து கம்பம் செல்லும் பஸ்களும் பைபாஸ் ரோட்டில் சென்று விடாமல் கோயில் வழியாக சுற்றி செல்ல கலெக்டர் உத்தரவிட வேண்டும். இந்த வசதிகளை பக்தர்களுக்கு உடனடியாக நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.