ஐயப்ப சீசனில் குற்றாலம் களைகட்டுது!
திருநெல்வேலி : குற்றாலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த போலீசார் நியமிக்கப்படாததால் சிற்றாறின் நிலை கவலைக்குள்ளதாகிறது. நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன்,ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ரம்மியமான சீசன் நிலவும். அருவிகளில் குளித்து மகிழவும், குளிர் சீதோஷ்ணத்திற்காகவும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது நவம்பர், டிசம்பரில் இரண்டாவது சீசன் துவங்கிவிட்டது. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையினால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. கார்த்திகை முதல்நாளான நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. சபரிமலை செல்லும் பக்தர்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து விரதத்தை துவக்கினர். சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கார்த்திகை முதல் நாளில் ஐயப்ப தரிசனத்திற்கு சென்றவர்களும் தற்போது குற்றால அருவிகளில் குளித்துவிட்டு, குற்றால நாதர் கோயிலில் வழிபட்டு செல்கின்றனர்.மேலும் குற்றாலத்தில் தற்போதைய இரண்டாவது சீசன்காலத்தில் வழக்கமான மலைப்பழங்களை தவிரவும், ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்தும் ருத்ராட்ச மாலைகள், பாசிமணிகள், காவி உடைகள், இசைக்கருவிகளின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. குற்றாலத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அருவிகளில் குளிப்பவர்கள் சோப்பு, எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதனை கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது மிகுதியாக குளிக்கும் ஐயப்ப பக்தர்கள் சோப்புகளை பயன்படுத்துகின்றனர். இதனை கண்காணிக்க போலீசார் நியமிக்கப்படவில்லை. மேலும் தற்போது குற்றால அருவி நீர் சிற்றாற்றில் சென்று விவசாயத்திற்கு பயன்படுகிறது. சோப்பும், பிளாஸ்டிக் கவர்களாலும் மீண்டும் சிற்றாறு கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.