நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பாலாலயம்
மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்யகல்யாண பெருமாள் கோவிலில், தொல்லியல் துறை பராமரிப்பு பணிக்காக, நேற்று பாலாயம் நடத்தப்பட்டது. சென்னை அடுத்த, திருவிடந்தை கிராமத்தில், நித்யகல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், 108 வைணவ தலங்களில், 62வது தலமாக விளங்குகிறது. மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடனும், உற்சவர் நித்யகல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடனும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காலவ முனிவரின் 360 மகள்களை, தினம் ஒரு மகள் வீதம், இறைவனே திருமணம் செய்தும், அவர்களை ஒருவராக்கி, தன் இடதுபுறம் இருத்தி, காட்சியளித்ததும், இத்தல வரலாறு. இதையடுத்து, திருமணத் தடை, மகப்பேறு ஆகிய தோஷ பரிகார தலமாக புகழ்பெற்றது. இக்கோவில், வழிபாடு அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை, பாரம்பரிய கோவில் அடிப்படையில், இந்திய தொல்லியல் துறை என, இரு துறைகளின் பொறுப்பிலும் உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன், அறநிலையத்துறை சார்பில், இங்கு திருப்பணிகள் செய்து, 2005ம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அடுத்த கும்பாபிஷேகத்திற்கு, இரு ஆண்டுகள் உள்ள நிலையில், தொல்லியல் துறை சார்பில், கோவிலை ரசாயன கலவை மூலம் சுத்தப்படுத்துதல் உட்பட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையடுத்து, இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தினர், தொல்லியல் துறை பராமரிப்பை திருப்பணியாக கருதி, கடந்த 29ம் தேதி இரவு துவங்கி, நேற்று காலை வரை, சுவாமிகளுக்கு நான்கு கால யாகசாலை வழிபாடு நடத்தி, நேற்று காலை 10:30 மணிக்கு, பாலாலயம் நடத்தினர்.