சனிப்பெயர்ச்சி: கோவில்களில் சிறப்பு ஏற்பாடு!
மேட்டுப்பாளையம் : காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலிலும், மேட்டுப்பாளையம் ஸ்ரீமாதேஸ்வரர் கோவிலிலும், நாளை (16ம் தேதி) சனிப்பெயர்ச்சி விழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காரமடையில், பிரசித்தி பெற்ற லோகநாயகி அம்பாள் உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாளை (16ம் தேதி) சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மூலவர் நஞ்சுண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பின், சனிப்பெயர்ச்சி பரிகார பூஜைகளும், விநாயகர் வழிபாடும், பெயர், நட்சத்திரம், ராசிகளுக்கு சிறப்பு பரிகார பூஜைகளும் நடக்கின்றன.மதியம் 12.30 மணிக்கு மேல் நவநாயகர்கள் ராசி கட்டங்களில் பூஜை நடைபெறுகிறது. சனீஸ்வர பகவான் பெயர்ச்சியையொட்டி, பிற்பகல் 2.45 மணிக்கு மகாதீபாராதனையும், அபிஷேக அலங்காரமும் நடக்கிறது. தலைமை அர்ச்சகர் ஞானதேசிக சுவாமிநாத குருக்கள் தலைமையில், அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடுகளையும், பரிகாரங்களையும் செய்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையம், சத்தியமூர்த்தி நகரில் ஸ்ரீமாதேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனிப் பெயர்ச்சி விழாவையொட்டி நாளை காலை 11.30 மணிக்கு விநாயகர் வழிபாடும், 12.00 மணிக்கு சனிபகவானுக்கு சிறப்பு வேள்வியும், பரிகார சங்கல்ப பூஜைகளும் நடக்கின்றன. பகல் 1.45 மணிக்கு சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்படுகின்றன.
தொடர்ந்து, 2.18 மணிக்கு சனிபகவான் துலாம் ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். பின், மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. ஜோதிவேலவன், சம்பத் ஆகியோர் வேள்வி நடத்துகின்றனர்.விழா ஏற்பாடுகளை, கோவில்நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.