சனிப்பெயர்ச்சி பரிகார பூஜை தீவிர ஏற்பாடு!
நாமக்கல் : நாமக்கல் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள கோவில்களில், சனிப்பெயர்ச்சி விழா, விமரிசையாக நடக்கிறது.
நாமக்கல் அடுத்த என்.கொசவம்பட்டியில், கவரா செட்டியார்களுக்கு சொந்தமான, உமா மகேஸ்வரி அம்பாள் சமேத உமா மகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தாண்டு, நாளை (டிச., 16) மதியம், 2.44 மணிக்கு, சனி பகவான், துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அன்று மதியம், 12 மணிக்கு, கணபதி ஹோமம், சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிரகப்ரீதி ஹோமம், மகா பூர்ணாகுதி, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடக்கிறது. பகல், 2.44 மணிக்கு, மகா தீபாரதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.
நாமக்கல் கோட்டை, கார்னேஷன் சத்திரத்தில், சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, அன்று காலை, 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், 9 மணிக்கு, சகஸ்ரநாம அர்ச்சனை துவக்கம், 10 மணிக்கு, நவக்கிர மற்றும் சனீஸ்வர பகவானுக்கு ஹோமங்கள் செய்யப்படுகிறது. மதியம், 1 மணிக்கு, அர்ச்சனை, ஹோமங்கள் நிறைவு செய்யப்படுகிறது. மாலை, 4 மணிக்கு ஸங்கல்பம், ஹோமங்கள், இரவு, 7 மணிக்கு, பூர்ணாகுதி, கோடி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாமக்கல் அடுத்த, செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோவிலில், மதியம், 12 மணிக்கு சனிப்பெயர்ச்சி ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. சனிப்பெயர்ச்சி விழாவில், மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டால், நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.