விநாயகர் வழிபாட்டுடன் சனிப்பெயர்ச்சி துவக்கம்!
கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா, நேற்று காலை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. அலங்காரவள்ளி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 8 மணிக்கு விநாயகர் வழிபாடு நடந்தது. தொடர்ந்து, நவக்கிரஹ அபிஷேகம், மகா சங்கல்பம், லட்சார்ச்சனை நடந்தது. இன்று, (15ம்தேதி) காலை, 8 மணிக்கும், மாலை, 5 மணிக்கும் நவக்கிரஹ அபிஷேகம், லட்சார்ச்சனை நடக்கிறது. நாளை, (16ம் தேதி) மதியம் சனீஸ்வரபகவானுக்கு விஷேச மூலமந்திர ஹோமமும், சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.
மதியம், 2.44 மணிக்கு மகாதீபாராதனை பிரசாதம் வழங்கப்படுகிறது. மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் ராசி உள்ளவர்கள் பரிகாரம் செய்து கொண்டு பயன்பெறலாம். பக்தர்கள் பெயர், ராசி, நட்சித்திரம் ஆகியவற்றை கோவிலில் பதிவு செய்து, பரிகார பூஜையில் பங்கேற்று, சனிபகவான் அருள் பெறலாம், என்று கோவில் செயல்அலுவலர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.