ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம் : கவரிமான் அலங்காரத்தில் நம்பெருமாள்!
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, பகல் பத்து நான்காம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. இதில், கவரிமான் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும், 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், மார்கழி மாதத்தில், 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது.நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து முதல் திருநாள் கடந்த, 22 ம் தேதி துவங்கியது. நேற்று காலை, 6.45 மணிக்கு பகல் பத்து நான்காம் நாள் உற்சவம் நடந்தது. இதில், உற்சவர் நம்பெருமாள், கவரிமான் கொண்டை அலங்காரத்தில், மூலஸ்தானத்தில் இருந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன், அர்ச்சுன மண்டபத்துக்கு காலை, 7.15 மணிக்கு வந்து சேர்ந்தார்.அப்போது, அரையர்களின் திருப்பல்லாண்டு இசையை அபிநயத்துடன் பாடினர். நம்பெருமாள், இசையை கேட்டவாறு மாலை, 5.45 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலை, 6.15 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்டு உபயங்கள் கண்டருளியவாறு, இரவு, 9.45 மணிக்கு மூலஸ்தானம் சேர்ந்தார். மூலவர் நம்பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் மூலவரை காலை, 6.30 மணி முதல் மாலை, 5.30 மணி வரையிலும், மாலை, 6.45 மணி முதல் இரவு, 8.30 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம்.