55 அடி உயர முருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு !
துறையூர் : துறையூரில், 55 அடி உயர மலேசிய மாதிரி முருகன் கோவிலில் நடந்த மண்டல பூஜையில், கிரேன் உதவியுடன் ஸ்வாமிக்கு புனித நீர் ஊற்றி பூஜை செய்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் கரட்டு மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், ஆறுபடையப்பன் சிலை அமைப்பு குழு சார்பில், 23 அடி உயர பீடம் அதன் மேல், 32 அடி உயர மலேசிய பத்துமலை முருகன் மாதிரி சுதை வர்ண சிலை அமைக்கப்பட்டது. நவம்பர், 12ம் தேதி கும்பாபிஷேகம்க நடந்தது. தொடர்ந்து, மண்டல பூஜை நடந்தது. 48ம் நாளான நேற்று, மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. ஸ்வாமி சிலைக்கு, கிரேன் உதவியுடன் வர்ணம் பூசப்பட்டது. மண்டலாபிஷேக விழாவில் பூஜை, ஹோமம், அபிஷேகம், கோ பூஜை செய்து தீபாராதனை வழிபாடு நடந்தது.கிரேன் உதவியுடன் ஸ்வாமி சிலைக்கு புனித நீர் ஊற்றி பூஜைகளை அக்னீஸ்வர சிவாச்சாரியார் செய்தார். மாலையில் சிறப்பு பூஜை, வாணவேடிக்கை நடந்தது.