உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் கும்பிட வழியில்லை: பக்தர்கள் அவதி!

மாசாணியம்மன் கோவிலில் கும்பிட வழியில்லை: பக்தர்கள் அவதி!

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின் இரண்டு புறமும் கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், கோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். சபரிமலை சீசனையொட்டி இப்பகுதியில் கடைகளின் ஆக்கிரமிப்பு துவங்கியுள்ளதால், சேத்துமடை ரோடு, கோவில் செல்லும் ரோட்டில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை சீசன் துவங்கியதிலிருந்து, மாசாணியம்மன் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகையால் சீசன் களைகட்டியது. இந்த ஆண்டு கார்த்திகை மாதம், துவக்கத்திலிருந்து மாசாணியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் துவங்கியுள்ளனர். பக்தர்கள் அனைவரும் வேன், கார் மற்றும் பஸ்களில் வருகின்றனர். பொள்ளாச்சி சேத்துமடை ரோட்டின் இருபுறங்களிலும், வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். வாகனம் அருகிலேயே சமையல் செய்து, எச்சில் இலை, பாலித்தீன் பைகளை தரையில் போட்டு செல்கின்றனர்.பஸ் மறைவிடத்தில் மலஜலம் கழிப்பதால், சேத்துமடை ரோட்டில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி தர, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகியுள்ளது.

கடைகளின் ஆக்கிரமிப்பு: மாசாணியம்மன் கோவில் நுழைவாயில் துவங்கி, ராஜகோபுரம் சாலையின் இருபகுதிகளிலும், ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருபுறமும் கடை நடத்துவோர், சுமார் 5 அடி முன்னே வந்து சாலையை ஆக்கிரமித்து பொருள்களை வைத்துள்ளனர்.இதனால் சாலை குறுகி, பக்தர்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பேரூராட்சி நிர்வாகம் பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்தது. தொடர் கண்காணிப்பு இல்லாததால், மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு?:
தினமும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து செல்லும் திருக்கோவிலுக்கு, மாதந்தோறும் சுமார் ரூ.20 லட்சம் காணிக்கை வருமானம் வருகிறது. பேரூராட்சிக்கும் சுற்றுலா வாகனங்களின் மூலம் வருவாய் கிடைக்கிறது. ஆனால் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து தராமல் அலட்சியம் காட்டி வருவது, பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.பக்தர்களின் பணம் பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவங்கள், பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களின் கண்ணாடியை உடைத்து, பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜிடம் கேட்டபோது, ”பொதுமக்களிடம் இருந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். இது குறித்து கேட்க, கோவில் உதவி ஆணையர் கார்த்திக்ைக தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை.

’குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா’ : வால்பாறை டி.எஸ்பி., சக்திவேல் கூறுகையில், ”பக்தர்களின் வாகனங்கள் குண்டம் பகுதியில் நிறுத்தப்பட்டால், போக்குவரத்து நெரிசல் குறையும். இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும். குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !