உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா!

திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா!

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த, திருப்படி திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவரை வழிபட்டனர். மேலும், நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்கள் பாடியவாறு சென்று, முருகப்பெருமானை வழிபட்டனர்.

365 படிகளிலும்...: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, திருப்படித் திருவிழா துவங்கியது. விழாவை ஒட்டி, காலை 9:00 மணிக்கு, சரவணப்பொய்கை அருகில் உள்ள மலைஅடிவாரத்தில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி, அரக்கோணம் எம்.பி., அரி ஆகியோர் முதல் பஜனை குழுவினரான கடையநல்லுார் குருநாயகம் குழுவினரை வரவேற்று, படித்திருவிழாவை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், ஒவ்வொரு படியிலும் பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று, மூலவரை வழிபட்டனர்.மேலும், பெண்கள் தங்களது நேர்த்திக்கடனை தீர்க்க, ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டனர். காலை 10:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவ பெருமான் தங்கத் தேரில் திருவீதியுலா வந்தும், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

பக்திபாடல்களை பாடி...
: தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. திருப்படி திருவிழாவை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தி இன்னிசை கச்சேரிகள் மற்றும் மலைக்கோவிலில் திருப்புகழ் பஜனை மண்டபத்தில், பல்வேறு குழுவினர்கள் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.நள்ளிரவு 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பல மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். திருப்படித் திருவிழா மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, மலைக்கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பக்தர்கள் ஏமாற்றம்...:
திருப்படித் திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், நேற்று பிற்பகல் வரை நடந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், நேற்று, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பெரும்பாலான பக்தர்கள், முருகன் கோவிலுக்கு வர முடியாமல் தவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !