சபரிமலை மகரவிளக்கு சீசனில் அரவணை தட்டுப்பாடு வராது!
சபரிமலை: பத்து லட்சம் டின் அரவணை ஸ்டாக் உள்ளதால் மகரவிளக்க சீசனில் அரவணை தட்டுப்பாடு வராது என்று சபரிமலை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அடுத்த சீசனுக்குள் நவீன இயந்திரங்களுடன் கூடிய புதிய அரவணை பிளான்ட் தொடங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அரவணை. நடந்து முடிந்த மண்டல சீசனில் ஒரு வாரம் அரவணைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் அரவணையில் தண்ணீரின் அளவு 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என்று கூறியதால் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு அதிகமானது. கேரள ஐகோர்ட்டும் இந்த அளவை உறுதி செய்ததால், மாற்று ஏற்பாடுகள் மூலம் அரவணை உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இதற்காக கூடுதல் அடுப்புகள் அமைக்கப்பட்டு, கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். மகரவிளக்கு நாளில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. சில நேரங்களில் 18ம் படியேறுவதற்கான கியூ நீலிமலை வரை காணப்படுகிறது. பம்பையில் அடிக்கடி பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மகரவிளக்குக்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மண்டலகாலம் போல அரவணைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலை காணப்படுகிறது. ஆனால் பத்து லட்சம் டின் அரவணை ஸ்டாக் உள்ளதாலும், தினமும் 2.20 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படுவதாலும் அரவணைக்கு தட்டுப்பாடு வராது என்று சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்த சீசனில் இனி அரவணை தட்டுப்பாடு வராது. ஆனால் அடுத்த சீசனில் தற்போதைய பிளான்ட்டை வைத்து அரவணை விநியோகிப்பது கடினம். தற்போதைய பிளான்ட் 15 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இதில் ஆறு நீராவி பாய்லர்கள் மட்டுமே உள்ளது. எனவே நவீன இயந்திர வசதிகளுடன் புதிய பிளான்ட் நிறுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தேவசம்போர்டிடம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய பேக்கிங் மெஷின் நிறுவவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் தினசரி உற்பத்தியை நான்கு லட்சமாக அதிகரிக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.