திருமலையில் ரதசப்தமி: அனைத்து சேவைகளும் ரத்து!
ADDED :3920 days ago
திருப்பதி: ’வரும், 26ம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு, திருமலையில் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என, தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார். அவர் கூறியதாவது: ரதசப்தமி அன்று, திருமலையில் ஒரு நாள் பிரம்மோற்சவம் நடக்கும். அதனால், ஒரே நாளில் திருமலை மாட வீதிகளில், ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வருவார். அதனால், அன்றைய தினம் வி.ஐ.பி., பிரேக் தரிசனம் மற்றும் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அன்று தர்ம தரிசனத்தில் மட்டுமே, பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும். மேலும், பாதயாத்திரை மார்க்கத்தில், பக்தர்கள் அதிக அளவில் வருவர் என்பதால், திவ்ய தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கைக்குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோருக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகளின் தரிசனம், என்.ஆர்.ஐ., தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசனம் என, சுபதம் வழியாக செல்லும் அனைத்து தரிசனங்களும் அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.