ஹைகோர்ட் மகாராஜா கோயில்!
பெயரே விசேஷமாக இருந்தாலும் இந்த ஸ்வாமியின் திருக்கதையும் விசேஷமானதுதான். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆறுமுகமங்களம், தென்கலம்புதூர், சீவலப்பேரி, தாழையூத்து ஆகிய ஊர்களில் இந்த ஸ்வாமிக்கு பழைமையான கோயில்கள் உண்டு. நெல்லை மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள ஊர் ஏரல். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆறுமுகமங்களம். இங்குள்ள சுடலைமாட ஸ்வாமி கோயிலின் பூசாரி மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. நிரபராதியான அவரை விடுவிக்க திருவுளம் கொண்ட சுடலைமாட ஸ்வாமி, வழக்கை விசாரித்த நீதிபதியின் கனவில் உண்மையை உணர்த்தினார். அத்துடன், மறுநாள் விசாரணையின்போது அந்த பகுதிக்கே புதியவரான ஒருவர் வந்து சாட்சி சொல்ல, பூசாரிக்கு விடுதலை கிடைத்தது. ஆனால், அதன் பிறகு அந்த புதியவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே, சாட்சி சொல்ல வந்தது சுடலைமாட ஸ்வாமியே என்று உறுதியாக நம்பிய மக்கள் அவருடைய கோயிலை, ஹைகோர்ட் மகாராஜா கோயில் என்றே அழைக்க துவங்கினார்கள். இதன் பிறகு, ஆறுமுகமங்கள் கோயிலில் சத்தியவாக்கு கேட்கப்பட்டு, அங்கிருந்து பிடிமண் எடுத்து வந்து, மற்ற மூன்று கோயில்கள் உருவானதுடன், அவையும் ஹைகோர்ட் மகாராஜா கோயில் என்றே பெயர் பெற்றன.