உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி, வடபழனி முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா!

திருத்தணி, வடபழனி முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா!

திருத்தணி, வடபழனி உள்ளிட்ட முருகன் கோவில்களில், நேற்று தைப்பூச திருவிழா, கோலாகலமாக நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, காவடி சுமந்தும், நேர்த்திக் கடன் செலுத்தியும், முருகப்பெருமானை வழிபட்டனர்.

திருத்தணி முருகன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, மூலவருக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், தங்கத்தேர் மற்றும் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மலைக்கோவிலில் வீதியுலா வந்தார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில், ஐந்து மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

வடபழனியில்: சென்னை வடபழனி, முருகன் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு, முருகப்பெருமானுக்கு, பால், பழம், பன்னீர், இளநீர் அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. பிற்பகல் 12:30 மணிக்கு, நாகாத்தம்மன் கோவிலில் இருந்து, 2000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம், பன்னீர் காவடி, புஷ்ப காவடி, வேல் காவடியுடன், ஊர்வலமாக, வடபழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் எடுத்து வந்த பாலால், சுவாமிக்கு அபிஷேகமும், புஷ்ப அங்கி அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இரவு 7:00 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், வள்ளி தெய்வானையுடன், முருகப்பெருமான் திருவீதி உலா நடந்தது.

சத்திய ஞான சபை திறப்பு திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை கறுப்பு மலையடிவாரத்தில், நேற்று காலை வள்ளலார் சத்திய ஞான சபை திறப்பு விழா நடந்தது. திருத்தணி, பெரியார் நகர், அருட்பிரகாச வள்ளலார் கோவில், பொன்னேரி, சின்னகாவணத்தில், வள்ளலார் தாயார் நினைவாக கட்டப்பட்ட, நினைவு இல்லம், வடசென்னை, ஏழுகிணறு, வீராசாமி தெருவில் வள்ளலார் வாழ்ந்த இல்லம், பாரி முனை கந்தகோட்டம், குன்றத்துார் முருகன் கோவில், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர் சிவா - விஷ்ணு கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று தைசப்பூச திருவிழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !