உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடசந்தூர் அருகே நிலாப்பெண்: வினோதமான ஒரு நாள் திருவிழா!

வேடசந்தூர் அருகே நிலாப்பெண்: வினோதமான ஒரு நாள் திருவிழா!

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டியில், 12 வயது நிரம்பிய இளம்பெண்ணை, நிலாவுக்கு மனைவியாக கருதி கொண்டாடும் நிலாப்பெண் எனும் வினோத திருவிழா நடந்தது.

வேடசந்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது தேவிநாயக்கன்பட்டி. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் பவுர்ணமி நாளில், நிலாப்பெண் எனும் பாரம்பரியமான விழா கொண்டாடப்படுகிறது.

இளம்பெண் தேர்வு:
வயதுக்கு வராத, உடல்நலம் குன்றிய இளம் பெண் ஒருவரை, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தேர்வு செய்கின்றனர். அப்பெண் நலம் பெறும் வகையில், நிலாப்பெண்ணாக அங்கீகரிக்கப்படுகிறார். தை மாதம் பவுர்ணமிக்கு ஏழு நாள் முன், ஊர் பெரியவர்கள் கூடி பெண்ணை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் பெண்ணுக்கு ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில், ஊரில் உள்ளவர்கள் பால், பழம், கலவை சாதம் உள்ளிட்ட சத்தான பொருட்களை கோயிலில் வைத்து கொடுப்பர்.

அதில் ஒரு பகுதியை எடுத்து, எண்ணெய் தீபம் இட்டு, நிலாவுக்கு வைத்து வணங்குவர். எஞ்சியவற்றை மற்ற குழந்தைகளும் பங்கிட்டு உண்பர். கடந்த ஆண்டு தேர்வான செல்வராஜ் என்பவரின் மகள் உமாமகேஸ்வரி,12, நிலா பெண்ணாக, அடுத்த ஆண்டு வரை வலம் வருவார்.

நிலாப்பெண் ஊர்வலம்: நேற்று முன்தினம் இவர், ஊரின் மையப்பகுதியில் உள்ள மாசடச்சியம்மன் கோவிலில் இருந்து, சூழ, தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அவருடைய தலையில் ஆவாரம் பூ சூடி, ஒரு கூடை நிறைய ஆவாரம்பூவை சுமக்கச்செய்து அழைத்து வந்தனர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட நிலாப்பெண்ணை, மாரியம்மன் கோவில் முன்பு உட்கார வைத்தனர்.

பின் அவ்வூர் பெண்கள், பாட்டுப்பாடி கும்மியடித்தனர். பிறகு மாசடச்சியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது தாய் மாமன்களால் கட்டப்பட்ட தென்னங்கீற்று குடிசையில் உட்கார வைத்து, பாட்டுப்பாடினர். அதற்குள் நிலா மறைய துவங்கியது. இளம்பெண் சுமந்துவந்த ஆவாரம்பூ கூடையில் மண் தீப சட்டியை வைத்து தீபம் ஏற்றினர். அதை சுமந்து சென்ற நிலாப்பெண், நீர் நிறைந்த கிணற்றில் அந்த பூ கூடையுடன் கூடிய தீபத்தை விட்டார். ஊர் மக்கள் அந்த தீபத்தை வணங்கி, வீட்டுக்குச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !