உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்!

கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்!

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வரும், 7ம் தேதியிலிருந்து, 9ம் தேதி வரை நடக்கிறது.

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள, கன்னிகா பரமேஸ்வரி கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகத்துக்கு தயாராகி வருகிறது. வரும், 7ம் தேதி, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாகிறது. 9ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவின் முதல் நாளான, 7ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, மஹா கணபதி, காப்புக்கயிறு கட்டுதல், சிவாச்சாரியார்கள் வேதம் ஓதுதல், கும்ப கலசம் வைத்தல், வாஸ்து பூஜைகள் நடக்கிறது. இரண்டாம் நாளான, 8ம் தேதி, காலை, 8:00 மணிக்கு சூரிய நமஸ்காரம், நவக்கிரஹ ஹோமங்கள் நடக்கிறது.

இரவு, 9:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. மூன்றாம் நாளான, 9ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்றைய தினம், அதிகாலை, 5:30 மணிக்கு, கலச அர்ச்சனை, கலச பூஜை, சந்திர ஹோமமும், காலை, 7:00 மணியிலிருந்து 7:30 மணி வரை, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பிராண பிரதிஷ்டை, வாசவி ஹோமம், ருத்ர ஹோமம், மஹா பூர்ணாஹூதி நடக்கிறது. பின், பகல், 12:00 மணியிலிருந்து, ஒரு மணி வரையிலும், கர்நாடக மாநிலம் ஹரிஹரபுரா ஆதிசங்கராச்சார்யா சாரதா லட்சுமி நரசிம்ம பீடம், பரம பூஜ்ய ஸ்ரீமத் ஜெகத்குரு சங்கராச்சார்யா ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹா சுவாமிகள் முன்னிலையில், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையடுத்து, விக்ரகங்களுக்கு மஹா அலங்காரம், அர்ச்சனை, மஹா மங்களார்த்தி காண்பிக்கப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு, வாண வேடிக்கைகளுடன், கன்னிகா பரமேஸ்வரி திருவீதி உலா புறப்படுகிறார். பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு, மறைந்த அஸ்வத் நாராயண ஷெட்டி குடும்பத்தினர், கோதண்டராம செட்டி, சந்திரசேகர ரெட்டி, சீனிவாசா, சங்கரநாராயண செட்டி மற்றும் ஆர்ய வைஸ்ய மண்டலியினர், ஆர்ய வைஸ்ய மகளிர் மண்டலியினர், ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !