இனிய முகம் காட்டுவோம்!
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் இது நம்மூரின் முதுமொழி. ஆம்! வார்த்தை மிகவும் வலிமையானது. தீய குணம் கொண்ட மனிதர்களைக் கூட அன்பான வார்த்தைகளால் நம் பக்கம் திரும்ப வைக்கலாம்., அவரது மனதிற்குள் இரக்க குணத்தை உருவாக்கலாம். நீங்கள் நட்பு வட்டத்தை பெரிதாக்கிக் கொள்ள விரும்பினால், முதலில் அன்பாக பேச கற்றுக்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் சிரித்த முகத்துடன் பேசுங்கள். இவ்வாறு இருந்தாலே உங்களுக்கான நட்பு வட்டம் எளிதில் பெருகி விடும். செல்வத்தை ஏழை எளியோருக்கு ஈவது மட்டுமே தர்மம் அல்ல. பெருமானார் (ஸல்) அவர்கள், பிற மனிதரிடம் புன்முறுவல் காட்டுவதும் தர்மமாகும் என்று சொல்லியுள்ளார்கள். சோர்வோ, துன்பமோ நபிகளாரிடம் எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்தையே பார்க்க முடிந்திருக்கிறது. முகம், அகத்தின் கண்ணாடி என்பார்கள். மனதில் வாட்டத்துடன் இருப்பவர்களுக்கு முகமும் சோர்ந்து போகும். ஆனால், மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்களின் முகம் ஒரு போதும் களைப்படைவதில்லை.ஒருமுறை, அபூஜஹீல் எனும் கொடியவன் நபிகளாரைப் பார்த்து, உங்கள் முகம் அவலட்சணமாய் இருக்கிறது. அருவருப்பாய் இருக்கிறது என கடுஞ்சொற்களை வீசினான். அதற்கு நபிகளார் அமைதியாக, ஆம் என்று சொல்லி, புன்முறுவல் பூத்த முகத்தைக் காட்டினார்கள். அந்த நேரத்தில் அங்கே வந்த நபிகளாரின் தோழர் அபூபக்கர் அவர்கள் நபிகளாரிடம், தங்கள் முகம் மருவற்ற முழுமதியைப் போல பிரகாசிக்கிறது. அழகு ததும்புகிறது என்று சொன்னார். அபூபக்கரின் புகழ் மொழிக்கும் நபிகள் ஆம் என்று சொல்லி புன்முறுவல் பூத்தார்கள். அதாவது இகழ்ந்தபோதும், புகழ்ந்தபோதும் அவர்களது முகத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. நபிகளாரின் தோழர்களுக்கோ குழப்பம். இதற்கு நபிகளாரிடமே விடை கேட்டனர். நான் அனைவருக்குமே ஒரு கண்ணாடி போலானேன். அபூஜஹீல் தன் முகத்தை என்னில் பார்த்தான். அது அவலட்சணமாக இருந்தது. அபூபக்கர் தம் முகத்தை என்னில் பார்த்தார். எனவே அது பூரண சந்திரனை ஒத்திருந்தது. எனவே இரண்டிற்கும் ஆம் என புன்முறுவல் பூத்தேன், எனக் கூறினார்கள்.அவரது பதிலைக்கேட்ட தோழர்கள் உண்மையை புரிந்து கொண்டார்கள்.எதிரிக்கும் இன்முகம் காட்டும் குணம், பண்புகளிலேயே மிகவும் மகத்தான பண்பாகும். ஒரு முஸ்லிம் மற்றவர்களைக் கடுஞ்சொல் சொல்ல மாட்டான்; சபிக்கமாட்டான் என அல்லாஹ் குர்ஆனில் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறான். மனிதப் பண்பு என்பதே இனிய முகம் காட்டி அன்பு கொட்டுகிற நிலைதான். அந்த பண்பை எல்லாரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.