உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்திரி நான்கு கால பூஜை!

சிவராத்திரி நான்கு கால பூஜை!

சிவராத்திரியான இன்று, கோயில்களில் நான்கு கால பூஜை நடக்கும். அபிஷேகப் பிரியரான சிவனுக்கு நான்கு காலத்திலும் அபிஷேகம் செய்யப்படும். இந்த பூஜை நடக்கும் விதம் தெரியுமா?

முதல் காலத்தில் சிவன் சோமஸ்கந்தராக வணங்கப்படுவார். சிவபார்வதியின் நடுவில் முருகன் உடனிருக்கும் கோலமே சோமாஸ்கந்தர். அப்போது அவருக்கு பஞ்ச கவ்ய (பசுஞ்சாணம், கோமயம், தயிர், பால், நெய் சேர்ந்த கலவை)அபிஷேகம் நடக்கும். பின், சந்தனம் சாத்தி, சிவப்பு பட்டு வஸ்திரம் அணிவிப்பர். பாசிப்பருப்பு கலந்த வெண் பொங்கல், வில்வம் பழம் நைவேத்யம் செய்வர். ரிக் வேத பாராயணம் நடக்கும். விளக்கெண்ணெய் தீபம் ஏற்றப்படும். மாணிக்கவாசகரின் சிவபுராணம் ஓதப்படும். சுவாமியை திருநீற்றுப் பச்சிலை, தாமரை, அரளி மலர்களால் அர்ச்சிப்பர். கல்லால மரத்தடியில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் இரண்டாம் காலத்தில் வழிபடுவர். பழங்கள், பால் கலந்த பஞ்சாமிர்தம் அபிஷேகம்செய்வர். பச்சைக் கற்பூரக் காப்பிட்டு, மஞ்சள் பருத்தி ஆடை சாத்துவர். பாயாசம், லட்டு, பலாப்பழம் நைவேத்யம் செய்யப்படும். யஜுர் வேத பாராயணம் நடைபெறும். தாமரை, வில்வத்தால் அர்ச்சிப்பர். இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றப்படும். ருத்ர தாண்டகம் என்னும் திருத்தாண்டகம் ஓதப்படும்.மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவராக வழிபாடு செய்வர். பிரம்மா அன்னப்பறவை வடிவில் சிரசையும், திருமால் வராக (பன்றி) வடிவில் பாதத்தையும் காணச் சென்று கொண்டிருப்பது போல் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த சாமத்தில், சிவனுக்குத் தேன் அபிஷேகம் செய்து, வெள்ளைக் கம்பளி ஆடை சாத்துவர். சத்துமாவு, பாயாசம், மாதுளை நைவேத்யம் செய்யப்படும். சாம வேத பாராயணம் செய்யப்படும். நெய் விட்டு கும்ப தீபம் ஏற்றப்படும்.  அருகம் புல், தாழம்பூவால் அர்ச்சனை நடக்கும். தாழம்பூ சிவராத்திரியன்று மூன்றாம் காலத்தில் மட்டுமே சாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த நாளிலும் சிவபூஜையில் பயன்  படுத்துவதில்லை. லிங்க புராண திருக்குறுந்தொகை ஓதப்படும். கருவறைக்குப் பின் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கும் இந்த சாமத்தில்  அபிஷேகம் நடக்கும். அவருக்கு நெய் பூசி, வெந்நீர் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவிக்கப்படும். ஸ்ரீருத்ரம், சமகம் துதிகள் பாராயணத்துடன், சிவ சஹஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படும். பொரி உருண்டை, எள் சாதம் நைவேத்யம் செய்யப்படும். நான்காம் காலத்தில் சிவனை லிங்க ரூபமாக வழிபடுவர். கரும்புச்சாறு அபிஷேகம் செய்து, கஸ்துõரி காப்பு சாத்துவர். பச்சை நிற மலர்களால் ஆன ஆடை அணிவிப்பர். கோதுமை, நெய், சர்க்கரை சேர்த்த உணவு நைவேத்யம் செய்யப்படும். அதர்வண வேத பாராயணம் நடக்கும். நல்லெண்ணெய் விட்டு மகா மேரு தீபம் ஏற்றப்படும். எல்லா மலர்களாலும் அர்ச்சனை செய்யப்படும். நாவுக்கரசரின் திருத்தாண்டகம் ஓதப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !