கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் மகா சிவராத்திரி விழா!
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் திருநீற்றம்மை சமேத செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் மகா சிவராத்திரியொட்டி மாலை 5:00 மணிக்கு முதல் கால பூஜை பால் அபிஷேகம், நாட்டியாஞ்சலி, சொற்பொழிவும் நடந்தது. இரவு இரண்டாம், மூன்றாம் கால பூஜை, 108 சங்காபிஷேகம், மேலமங்கலம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகளின் சொற்பொழிவும், அதிகாலை நான்காம் கால பூஜை, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, அருளார் அமுது வழங்கலும் நடந்தது.
கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், வடக்கனந்தல் உமாமகேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், தென்கீரனார் அருணாசலேஸ்வரர், முடியனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதி ஈஸ்வரர், சிறுவங்கர் சிவன் ஆகிய கோவில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நான்கு கால பூஜைகளில் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் சத்யசாய் சேவா சமிதியில் நாட்டியாஞ்சலி, மற்றும் திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பாலசுப்ரமணியன் பஜன் குழுவினரின் நாம சங்கீர்த்தன பஜனை, சென்னை சாய் சத்சங்க பீஷ்ம பிதாமகர் சாயிமோகனின் சிறப்பு சொற்பொழிவும் நடந்தது. வி.ஏ.எஸ்., திருமண மண்டபத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் ஜக்கி வாசுதேவின் ஆன்மீக சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியும் நடந்தது.