திப்பக்காப்பட்டி மாரியம்மன்கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல்: திப்பக்காப்பட்டி மாரியம்மன், பட்டாளம்மன் கோவிலில், வரும், 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.நாமக்கல் அடுத்த தாளம்பாடி திப்பக்காப்பட்டியில், மிகுந்த பொருட்செலவில், புதிதாக மாரியம்மன், பட்டாளம்மன், ஏர்காரன் கோவில் திருப்பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு, நாளை காலை, 7 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை துவங்குகிறது. தொடர்ந்து காவிரி தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம், கும்பங்கள் யாகசாலைக்கு அழைத்து வருதல், முதல்கால யாக பூஜை நடக்கிறது. பிப்ரவரி, 21ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு இரண்டாம் காலயாகபூஜை, அஷ்டபந்தனம், மூன்றாம் கால யாகபூஜை, பூர்ணாகுதியும் நடக்கிறது.பிப்ரவரி, 22ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, நாடி சந்தானம், மங்கள திரவிய ஹோமம், யாகசாலையில் இருந்து கும்பங்கள் மூலாலயத்துக்கு புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, கோபுலக கலசம், மகா கணபதி, நவக்கிரகம், மாரியம்மன், பட்டாளம்மன் ஸ்வாமிக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஸ்வாமி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.