பிருந்தாவன் விதவை பெண்கள் ஹோலி கொண்டாட ஏற்பாடு!
லக்னோ: உத்தர பிரதேசத்தின் வாரணாசி மற்றும் பிருந்தாவன் நகரங்களில், மடங்களில் தங்கியுள்ள விதவைப் பெண்கள், முதல் முறையாக, ’ஹோலி’ பண்டிகையை கொண்டாட உள்ளனர். கணவனை இழந்த பெண்கள், விதவைகள் என அழைக்கப்படுகின்றனர். இத்தகையவர்கள், வண்ணப் புடவைகள் அணியக் கூடாது; நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என, காலம் காலமாக கட்டுப்படுத்தப்பட்டு வந்தனர். உ.பி., மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த விதவைப் பெண்கள், உத்தர பிரதேசத்தின் வாரணாசி மற்றும் பிருந்தாவன் நகர மடங்களில், ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாகக் கருதப்படும் அவர்களுக்கு, சமீபத்தில், புதுவாழ்வு கிடைத்தது. ’சுலப்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில், அந்தப் பெண்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அந்த வகையில், விதவைப் பெண்களை மேலும் கவுரவிக்கும் விதமாக, அவர்களை, ஹோலி பண்டிகை கொண்டாட, அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம், இத்தனை ஆண்டுகளாக மடங்களில் முடங்கிக் கிடந்த முதிய பெண்கள், வண்ணப் பொடிகளை ஒருவர் மீது மற்றொருவர் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்த உள்ளனர். ஹோலி பண்டிகை, அடுத்த மாதம், 3ல் துவங்கி, 6ல் முடிவடைகிறது.