உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரப்பூர் கோவில்களின் மாசிப் பெருந்திருவிழா: இன்று வேடபரி உற்சவம்!

வீரப்பூர் கோவில்களின் மாசிப் பெருந்திருவிழா: இன்று வேடபரி உற்சவம்!

மணப்பாறை: மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர் கன்னிமாரம்மன், பொன்னர், சங்கர் கோவில்களின் மாசிப் பெருந்திருவிழாவில், வேடபரி நிகழ்ச்சி இன்று (26ம் தேதி) மாலை நடக்கிறது.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரை மையமாகக் கொண்டு, பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அண்ணன்மார் வீரவரலாற்றில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில், வளநாடு, நெல்லிப்பட்டி நெல்லியம்மன் கோவில், வெள்ளாங்குளத்தூர், படுகளம், கூவண்ணாம்பள்ளம், வெண்முடி, வீரப்பூர், அணியாப்பூர் ஆகியவை முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.கொங்குநாட்டு மக்கள், குலதெய்வமாக வழிபடும் இக்கோவில்களில் குன்னுடையான், தாமரைநாச்சியார், பொன்னர், சங்கர், தங்காள் ஆகிய நடமாடும் தெய்வங்களும், பெரியக்காண்டியம்மன் என்ற கன்னிமாரம்மன், செல்லாண்டியம்மன், நெல்லியம்மன் ஆகிய அன்னைபரமேஸ்வரியின் அவதார தெய்வங்களும் வீற்றிருக்கின்றனர். மந்திரம் காத்த மகாமுனி, கருப்பண்ண ஸ்வாமி, மதுரை வீர ஸ்வாமி, காத்தவராயன், சந்தனக்கருப்பு, கோட்டைமுனி, சடையாண்டிமுனி, வீரபாகு சாம்புவன், சப்தகன்மார், 68 பூதகணங்கள் ஆகிய பரிவாரதெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

வீரப்பூரில் நடக்கும் திருவிழாவை ஒட்டியே, அண்ணன்மார் ஸ்வாமிகளின் மற்ற கோவில்களிலும் திருவிழா கொண்டாடப்படுகிறது. வீரப்பூரில், ஆண்டுதோறும் மாசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து, பத்து நாட்கள் விழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா கடந்த, 19ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு, படுகளத்தில் அம்மன்பவனி வருதல், படுகளம் சாய்தலும், பின் எழுப்புதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று மாலை, 6 மணிக்கு வீரப்பூரில் வேடபரி குதிரைத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. காளை மாட்டின் மீது சாம்புவன் முன்செல்ல, பொன்னர் பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் கையில் அம்புஏந்தி பின் செல்ல, அதன் பின் வெள்ளை யானை வாகனத்தின் மீது பெரியகாண்டியம்மன் அமர்ந்து செல்லவும் கடைசியில் தங்காள் குடத்தில் தீர்த்தம் எடுத்து சென்று அனியாப்பூர் குதிரைக்கோவிலில் அம்பு போடும் வேடபரி நிகழ்வு நடக்கிறது. நாளை (27ம் தேதி) காலை, 10.30 மணிக்கு கன்னிமாரம்மன் திருத்தேர் வடம்பிடித்தல் விழாவும் நடக்கிறது. விழாவில் திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன் ஊர் முக்கியஸ்தர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !