நைனாமலையில் மாசி மக தேரோட்டம்!
நாமக்கல்: வரும், மார்ச், 7ம் தேதி, நைனாமலை சோமேஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாசி மகம் தேரோட்ட விழா கோலாகலமாக நடக்கிறது. சேந்தமங்கலம் அடுத்த நைனாமலை வரதராஜ பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள், சோமேஸ்வரர் ஸ்வாமி வகையறா கோவில்கள் சார்பில், மாசி மாத மகம் நட்சத்திர தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று (பிப்., 26), காலை, 10.30 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்றிரவு சிம்மம் மற்றும் ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா நடக்கும்.நாளை (பிப்., 27), காலை, 10 மணிக்கு, அபிஷேகம் மற்றும் ஆராதனை, அன்றிரவு, அனுமந்த மற்றும் சிம்ம வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா நடக்கும். அதேபோல், 28ம் தேதி, கருட மற்றும் பூத வாகனம், மார்ச், 1ம் தேதி, ஷேச மற்றும் ரிஷப வாகனம், 2ம் தேதி, யானை வாகனம், 3ம் தேதி, கல்யாண புஷ்ப பல்லக்கு, 4ம் தேதி, சோமேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் குதிரை வாகனத்தில் ஸ்வாமி புறப்பட்டு, அன்றிரவு, வான வேடிக்கை நடக்கிறது.வரும், 7ம் தேதி, சோமேஸ்வரர் தேர்வடம் பிடித்தல், அன்றிரவு, சத்தாபரணம், கற்பக விநாயகர் கைலாச வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு நடக்கிறது. 8ம் தேதி, வசந்த உற்சவம் மற்றும் வெள்ளி பல்லக்கில், ராஜமோஷ சேவை புறப்பாடு, 9ம் தேதி விடையாத்தி நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது.