உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுக்கோட்டை வரதராஜர்

புதுக்கோட்டை வரதராஜர்

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாசர். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜர். இங்கு ஆஞ்சநேயர், பால ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் வைகாசி திருவோணத்தை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் திருவீதியுலா, திரு அலங்காரம் என அமர்களப்படும். ஏழாம் நாள் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டு சுவாமியை வணங்கினால், திருமண தோஷம் விலகும் என்பது ஐதிகம்! புரட்டாசி மாதம் துவங்கிவிட்டால், இங்கு தினமும் நுõற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி செல்வார்களாம். பக்தர்கள் சுவாமி மற்றும் தாயாருக்கு வஸ்திரம் சார்த்தி, நைவேத்தியம் படைத்து வணங்குகின்றனர். புரட்டாசி 3-வது சனிக்கிழமையில், மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இந்த அலங்காரத்தில் பெருமாளைத் தரிசித்து வணங்கினால், மனதில் நிம்மதி நிலைக்கும்; சந்தோஷம் குடிகொள்ளும் என்கின்றனர் பக்தர்கள். பீஷ்மர் முக்தி அடைந்த தை மாத சப்தமியில்.... அதிகாலையில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெற்று, அவர் வீதியுலா வருகிற வைபவமும் இங்கு விசேஷம். நவராத்திரி நாட்களில் தாயாருக்கு மஞ்சள், சந்தனம், தேங்காய், தானியங்கள், வளையல்கள், பூக்கள் ஆகியவற்றால் அனுதினமும் அலங்காரம் செய்யப்படும். தீபாவளியன்று பெருமாளுக்கும் ஸ்ரீ அலர்மேல்மங்கைத் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். இந்த நாளின், பெருமாளுக்கு புது வஸ்திரம் சார்த்தி குடும்பத்துடன் வழிபட்டால், குபேர சம்பத்துகள் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !