பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம்!
ADDED :4070 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், நேற்று சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலை பஞ்சவடீயில் 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம், புனர்பூச திருமஞ்சனம் நடந்து வருகிறது. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும், புனர்பூச நட்சத்திரமும் நேற்று ஒருசேர வந்தது. இதையடுத்து, நேற்று மாலை 4.30 மணிக்கு, பால், பன்னீர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களுடன் சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி சந்திரமனோகரன் செய்திருந்தனர்.