உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் 2 மாதம் தேவ சபையில் பிரவேசம் பூஜை முறைக்கு கோவில் தீட்சிதர் எதிர்ப்பு!

நடராஜர் 2 மாதம் தேவ சபையில் பிரவேசம் பூஜை முறைக்கு கோவில் தீட்சிதர் எதிர்ப்பு!

சிதம்பரம்: நடராஜர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி பாலாலயம் நடக்க இருப்பதையொட்டி நடராஜர் சுவாமி இரண்டு மாதம் காலம் தேவ சபையில் பிரவேசம் செய்வதற்கு கோவில் பூஜகர் கைலாச சங்கர தீட்சிதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது; நடராஜர் கோவில் தீட்சிதர் கனக சபேச தீட்சிதர், கோவில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டி அமைக்க வேண்டும் என சப் கலெக்டர் மற்றும் பொது தீட்சிதர்கள் சபையில் அளித்த கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் கோவில் பொது தீட்சிதர் நிர்வாகிகள் கோவில் திருப்பணி செய்யவில்லை, வர்ணம் (பெயிண்ட்) மட்டுமே அடிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். கோவில் திருப்பணி செய்யவில்லை என கூறிவிட்டு, தற்போது பாலாலயம் என்ற பெயரில் கோவில் வழக்கத்தில் எப்பொழுதும் இல்லாத வகையில் சித்சபையில் இருக்கும் நடராஜர் சுவாமியை எடுத்து தேவசபையில் இரண்டு மாதம் காலம் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இது கோவில் மரபுக்கு எதிர்மாறானது. 1987ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது கூட நடராஜர் ஒரு வார காலம் தான் இருந்தார். அதேப்போன்று சிதம்பரம் ரகசியத்தையும் பாலாலயம் செய்யும் போது, ரகசியம் உள்ள இடத்திற்கு யார் பூஜை செய்வது. இதனால் கோவில் பூஜை முறைகள் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது கோவில் விதிகளுக்கு புறம்பானது.தங்க கூரை பணிகள் செய்ய சித்சபையில் தவறு நடக்கவுள்ளது. சித்சபையில் உள்ள துாண்களை எடுத்து பல வேலைகள் செய்ய திட்டமிட்டுள்ளனர். இது தங்க கூரைக்கு ஆபத்து ஏற்படும். கோவில் திருப்பணி கமிட்டி அமைக்காமல், ஒரு தனிப்பட்ட தீட்சிதர் கூறும் முடிவால் பல வேலைகள் செய்யப்படுகிறது. கோவில் விதிமுறைகள், சம்பிரதாயங்கள் போன்றவை கருத்தில் கொள்ளாமல் செய்யப்படும் நடவடிக்கைகளால் தீமைகள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள். இவ்வாறு கைலாச சங்கர தீட்சிதர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !