போடி- வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு பஸ் விடப்படுமா
போடி : போடியிலிருந்து வடமலை நாச்சியம்மன் கோயில் வரை பஸ் வசதி இல்லாததினால் விளைபொருட்களை கொண்டு வர முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். போடியிலிருந்து 4 கி.மீ., தொலைவில் வடமலை நாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்லும் பாதையில் மா, இலவம், சப்போட்டா, தென்னை உட்பட ஏராளமான விவசாய நிலங்கள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ளன. விவசாயிகளும் இப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர். ரோடு வசதி இருந்தும் பஸ் வசதி இல்லாமல் உள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் டூவீலர், ஆட்டோ, மினி டெம்போக்கள் மூலம் பயணம் செய்து வருகின்றனர். கூடுதல் கட்டணம் கொடுக்க முடியாத பலர் நடந்து சென்று வருகின்றனர். இப்பகுதியில் விளையும் விளைபொருட்களை உரிய நேரத்தில் கொண்டு வர முடியாத நிலை உள்ளது. வடமலைநாச்சியம்மன் கோயிலுக்கு பக்தர்களும் சென்று வருகின்றனர். எனவே போடியில் இருந்து வடமலைநாச்சியம்மன் கோயிலுக்கு காலை, மாலை இரு நேரங்களிலும் பஸ்வசதி செய்து தர வேண்டும்.