அறப்பளீஸ்வரர் கோவிலில் இன்று பாலாலய பூஜை
நாமக்கல் : கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலில், பாலாலய பூஜை, இன்று (மார்ச், 2) கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் அடுத்த, கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஸ்வாமி, அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 1,300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டது. அதற்கு சான்றாக, கி.பி., 7ம் நூற்றாண்டில், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரும் தேவாரப்பாடல்களில் இக்கோவிலை பற்றி பாடி உள்ளனர்.மேலும், கொல்லிமலையை சதுரகிரி என்றும் அழைக்கின்றனர். இக்கோவில், மூர்த்திச் சிறப்பு, தலச்சிறப்பு, தீர்த்தச் சிறப்பு என, மூன்று வகை சிறப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அறப்பளீஸ்வரர் சதகத்தை, அம்பலவாண கவிராயர் பாடியவர் என்றும், பாடப்பெற்றவர் மோழைக் கவுண்டர் மகன் கருமக்கவுண்டர் என்றும் கூறப்படுகிறது.வரலாற்று சிறப்பு மிக்க அறப்பளீஸ்வரர் கோவிலில், பாலாலய விழாவுக்கு, ஹிந்து அறநிலையத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். அவ்விழா இன்று (மார்ச், 2) கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் விழா துவங்குகிறது.தொடர்ந்து, புண்யாகவாஜனம், வாஸ்து பூஜை, வேதபாராயணம் நடக்கிறது. காலை, 6 மணிக்கு, கணபதி, ருத்ர மற்றும் துர்கா ஹோமம், பூர்ணாகுதியும், 7 மணிக்கு, தீபாராதனையும் நடக்கிறது. அதையடுத்து, காலை, 7.15 மணிக்கு பால ஸ்தாபனம் (பிம்பபாலாலயம்) வெகுவிமரிசையாக நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, ஊர்மக்கள் செய்துள்ளனர். "திருக்கோவில் கும்பாபிஷேகம் செய்து, 12 ஆண்டுகள் நிறைவுற்றதால், அறப்பளீஸ்வரர் ஸ்வாமி, அறம் வளர்த்த நாயகி, முருகன் மற்றும் பரிவாக மூர்த்திகளின் சன்னதி, தரை தளம், விமானம் ஆகியவற்றை புனரமைப்பு செய்து திருப்பணிகள் நடக்கிறது. அதற்காக உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.