பெரிய குருநாத ஸ்வாமி கோவில் புனருத்தாரன மகா புண்யார்ச்சனை
அந்தியூர் : வெள்ளித்திருப்பூர் அடுத்த புரவிபாளையம் பகுதியில் உள்ள பெரிய குருநாத ஸ்வாமி கோவில், நூறாண்டுகள் பழமையானது. இக்கோவிலில், பெரிய குருநாதஸ்வாமி, காமாட்சி அம்மன், பெருமாள்சுவாமி, வீரபத்திரர் சுவாமி சன்னதிகள் உள்ளன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடக்கும் பூஜையில் பங்கேற்று, ஏராளமானவர்கள், குருநாத ஸ்வாமியை வழிபடுவது வழக்கம்.மாதந்தோறும் அமாவாசை அன்று சிறப்பு பூஜை நடக்கும். ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் விழா எடுக்கப்படும். இக்கோவிலுக்கு, ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.இக்கோவிலின் கட்டிட திருப்பணிகள் கடந்த, ஆறு மாதம் முன்பு, பரம்பரை அறங்காவலர் சாந்தப்பன் தலைமையில், ஊர் பொதுமக்களால் துவங்கப்பட்டு, திருப்பணிகள் முடிந்து, இன்று (2ம் தேதி) காலை, 10 மணிக்கு மேல் புனருத்தாரன மகா புண்யார்சனை சம்ப்ரோஷண வைபவம் நடக்கிறது.