பெரிய காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
க.பரமத்தி: க.பரமத்தி அருகே குப்பம் பெரிய காண்டியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரியகாண்டியம்மன் கோவிலில் கடந்த சிலமாதங்களாக புனரமைப்பு பணிகள் நடந்தது. கடந்த 16ம் தேதி கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, சுதர்சன ஹோமம், கோ பூஜை ஆகியவை நடந்தது. 17ம் தேதி சாந்தி ஹோமம், திசா ஹோமம், கும்ப அலங்காரமும், 18ம் தேதி தமிழ்மறை பாராயணம், வேதபாராயணம், ருத்ரபாராயணம், காயத்ரி ஹோமம், திரவிய ஹோமம், மூலமந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலைநிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் காலை யாகசாலையில் நான்கு காலயாக பூஜைகளுடன், பூர்ணா ஹூதிக்கு பின் விநாயகர், பெரியகாண்டியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுரங்கள், புனித கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. கரூர், நொய்யல், அரவக்குறிச்சி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.