திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் 183வது அவதார தினவிழா!
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதரித்த தினமான மாசி 20 பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு அய்யா வழி பக்தர்கள் கடற்கரையில் குடும்பத்துடன் திரண்டனர். இரவு அய்யா வைகுண்டர் 8 மணிக்கு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9 மணிக்கு புஷ்ப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலையில் சூரிய உதயத்தின் போது அய்யா வழி பக்தர்கள் பதம் விடும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்பு பக்தர்கள் சூரிய உதயத்தின் போது கடலில் புனித நீராடினர். அவதார பதியில் சிறப்பு அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அய்யா வைகுண்டர் காட்சி அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அவரது தலைமைப்பதி அமைந்துள்ள சுவாமிதோப்புக்கு பேரணி புறப்பட்டு சென்றது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.