உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் தவன உற்சவம்!

திருத்தணி முருகன் கோவிலில் தவன உற்சவம்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய, தவன உற்சவ விழா, இன்று வரை நடக்கிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில், கடந்த மாதம், 23ம் தேதி முதல், இம்மாதம், 5ம் தேதி வரை மாசி மாத பிரம்மோற்சவ விழா நடந்தது. 2ம் தேதி திருக்கல்யாணம், 3ம் தேதி தீர்த்தவாரி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பிரம்மோற்சவ விழா, நிறைவடைந்த, ஏழாம் நாளில் இருந்து மூன்று நாட்கள் உற்சவர் முருகப்பெருமானுக்கு தவன உற்சவம் நடைபெறும். இந்த உற்சவம் முருகப்பெருமான் வள்ளி திருமணம் முடிந்ததும், உஷ்ணத்தில் இருப்பார், அவரை குளிர்விக்க, மூன்று நாட்கள் நடத்தப்படுவது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு, மலைக்கோவிலில் உள்ள, தவன மண்டபம் முழுவதும், தவன இலை மற்றும் மல்லிகை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் அந்த மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தவனம் மற்றும் மல்லிகை பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், நேற்றும் தவன உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு நாட்டு சர்க்கரை பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று இரவுடன், தவன உற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !